அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மதிமுக சார்பில் ராஜேந்திர சோழன் அரியணையேறிய 1000-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் கு.சின்னப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் பொதுச்செயலர் வைகோ பேசியது:
பெரும்படை திரட்டி ஈழம் சென்று, தமிழனின் மானத்தையும் மணிமுடியையும் மீட்டு வந்தவன் ராஜேந்திர சோழன். 1017-ல் 5-ம் மகிந்தனை பிடித்து வந்து தமிழ் மண்ணில் சிறை வைத்ததில் 12 ஆண்டுகள் சிறையிலிருந்து அவன் இறந்ததாக சொல்கிறது மகாவம்சம்.
ஐம்பெரும் குழுவை அமைத்து நிர்வாகத்தையும், குடவோலை முறை மூலம் அரசியலையும் கற்றுத் தந்த அவர்களுக்கு நாம் என்ன மரியாதை செய்திருக்கிறோம். ஏறத்தாழ இமயம் வரை சென்று தமிழனின் வீரத்தைப் பறை சாற்றித் திரும்பியதோடு, அதன் நினைவாக வியக்கத்தக்க கோயிலையும், சோழகங்கம் என்ற கடல் போன்ற ஏரியையும் இங்கே உருவாக்கியவன் ராஜேந்திர சோழன்.
இத்தனை வரலாற்று பெருமைக்குரிய கங்கை கொண்ட சோழபுரம் இருண்டு கிடப்பதை அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ராஜேந்திரன் அரியணையேறிய 1000-வது ஆண்டுவிழாவை மத்திய, மாநில அரசுகள் நடத்தாதது வருத்தத்துக்குரியது.
அன்று காவிரியின் குறுக்கே அணை கட்டியபோது படையோடு சென்று அதை உடைத்துவிட்டு வந்தவன் தமிழன். இன்று அப்படி செய்ய சட்டம் அனுமதிக்காது. ஆனால், கரிகாலன் காலத்திலிருந்து பாது காக்கப்பட்ட காவிரி உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தால், வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிப்பார்களா? ராஜேந்திர சோழன் புகழ் பாடுவதோடு, அவனது நெஞ்சுரத்தில் கோடியில் ஒரு பங்கேனும் நமக்கு மிஞ்சட்டும் என்றார்.