தமிழகம்

பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதாக கேரளத்தில் பிரச்சாரம்: தேனி மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம்

ஆர்.செளந்தர்

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பெரியாறு அணையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையில் 136 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கேரளம், இதுதொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த நிலையில், பெரியாறு அணை உடைந்துவிடும் நிலையில் இருப்பதுபோல தற்போது கேரளத் தில் குறும்படம் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘BEFORE’ என்ற அந்தக் குறும்படம் கேரள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. தவிர, வீடுதோறும் சிடிக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கண் முன்னால் இவ்வளவு ஆபத்து இருப்பதாக மக்களுக்கு உணர்த்தும் நோக்கிலேயே, ‘BEFORE’ (கண் முன்னால்) என்று குறும்படத்துக்கு பெயர் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முல்லை பெரியாறு அணை மீட்புக் குழுத் தலைவர் ரஞ்சித்குமார், 18-ம் கால்வாய் திட்ட விவசாய சங்கத் தலைவர் ராமராஜ், செயலர் திருப்பதிவாச கன் ஆகியோர் கூறியதாவது: பெரியாறு அணை பலமாக இருப்பதாக உச்ச நீதிமன்றமும், மூவர் குழுவும் உறுதி செய்துள்ளன. ஆனால், கேரள மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்தக் குறும்படத்தை திரையிட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்தக் குறும்படத்துக்கு உடனடியாக தடை விதித்து, சிடிக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இந்தக் குறும்படத்தை தயாரித்தவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக மூத்த பொறியாளர்கள் தயாரித்த உண்மை நிலை சிடியை மூவர் குழுவினர் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றனர்.

முல்லை பெரியாறு அணை உடைந்து பேராபத்து நேரிடுவது போல கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ‘டேம் 999’ படத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் அந்த திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT