தமிழகம்

ராசாவுக்கு எதிராக ராணி: ஊழலுக்கு எதிரான போர் என அனைத்துக் கட்சிகளும் முழக்கம்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊழலுக்கு எதிரான போர் என அனைத்துக் கட்சிகளும் முழங்கி வருவதால் வாக்காளர்கள் குழப்ப மடைந்துள்ளனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் தனித் தொகுதியாக அறிவிக் கப்பட்டது. இதனால் காங்கிரஸின் கோட்டையாக இருந்த நீலகிரி தொகுதியில் திமுக போட்டியிட்டது. வேட்பாளராக ஆ.ராசா நிறுத்தப்பட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த சமயத்திலும் ஆ.ராசா 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையிலிருந்த ஆ.ராசா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நாடு முழுவதும் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீ்ண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆ.ராசா தேர்தலில் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரை மேடைக்கு மேடை சாடி வருகிறார். இதற்கு பதிலளித்த ஆ.ராசா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் தான் அளித்த 102 பக்க விளக்கத்தில் என் மீது தவறு இருந்தால் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க தயார் என்றும், இதுதொடர்பாக ஜெயலலிதா நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா எனவும் சவால் விடுத்தார்.

இதே கேள்வியை திமுக தலைவர் கருணாநிதியும் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அனைவரின் கண்காணிப்புக்கும் உள்ளாகியுள்ளது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி. இங்கே ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் மேலோங் கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளராக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணியை நிறுத்தியுள்ளது. ராசாவுக்கு எதிராக ராணி என அவர்கள் முழங்கி வருகின்றனர்.

பரஸ்புரம் சொத்துப் பட்டியல்

அதிமுக.வும் தனது பங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளைப் பட்டியலிட்டு வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகிறது. முன்னாள் மாவட்டச் செயலாளர் பால நந்தகுமார் அச்சிட்டுள்ள நோட்டீஸ் பார்வை யாளர்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.

மண்டை ஓடு சின்னத்துடன் அபாயத்தை அறிவுறுத்தும் சிவப்பு நிறத்தில், கர்ப்பிணிகள் மற்றும் இதய பலவீனமாவர்கள் படிக்க வேண்டாம் என எச்சரிக்கையுடன் அச்சிட்டுள்ளார். பின்வரும் பக்கங்களில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துப் பட்டியலை அச்சிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க திமுகவினர் முகநூலில் ஜெயலலிதா சொத்து என்று ஒரு பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க திமுக வேட்பாளர் ஆ.ராசா, தான் செய்தது குற்றமில்லை, புரட்சி என்றும், தானும் ஊழலுக்கு எதிரானவன் எனவும் தெரிவித்தார்.

பாஜக.வும் இந்த தேர்தல் நீலகிரி மக்கள் ஊழலை ஆதரிப் பவர்களா அல்லது எதிர்ப் பவர்களா என்பதை உலகமே கண் காணிப்பதாகவும் இதனால் பாஜக.வை ஆதரிக்க வேண்டும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளுமே ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் என களமிறங்கியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT