நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த கையோடு இரண்டு அவசரச்சட்டங்களை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் தொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த சுவடு மறைவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சரவை அவசர அவசரமாகக் கூடி இரு அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. காப்பீடுத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டு உச்சவரம்பை 26 விழுக்காட்டிலிருந்து 49 விழுக்காடாக உயர்த்துதல், நிலக்கரி வயல்களை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றுக்கு வகை செய்யும் அவசரச் சட்டங்கங்களை குடியரசுத் தலைவர் எந்த நேரமும் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே சீர்திருத்தங்கள் என்ற பெயரின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பு அதிகரிக்க அனுமதிக்கப்படுவது இந்திய மக்களின் சேமிப்புகள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்படுவதற்கே வழி வகுக்கும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 26% அந்நிய முதலீட்டைப் பயன்படுத்தி இந்தியாவில் நுழைந்துள்ள வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களின் சேவை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தான் இன்னமும் இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49%ஆக அதிகரிக்க வேண்டிய அவசியமே இல்லை.
காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை அதிகரிப்பதற்கான சட்ட முன்வரைவு கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்தே நிலுவையில் உள்ளது. இம்முன்வரைவு கொண்டுவரப்பட்ட போது அதை பாரதியஜனதா கட்சி கடுமையாக எதிர்த்தது. முந்தைய ஆட்சியில் நிதித்துறை நிலைக்குழுவின் தலைவராக இருந்த பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா காப்பீட்டுத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்கவேக் கூடாது என்று மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தார்.
இதேபோல் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்த்ததால் தான் கடந்த 8 ஆண்டுகளாக இம்முன்வரைவு நிறைவேற்றப்படாமல் இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை பாரதிய ஜனதாவால் எதிர்க்கப்பட்ட ஒரு சட்டமுன்வரைவை இப்போது அவசர சட்டமாகக் கொண்டு வர அதே பாரதிய ஜனதா அரசு துடிப்பது ஏன்? என்பது புரியவில்லை.
காப்பீட்டுத் துறை சட்ட முன்வரைவாக இருந்தாலும், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விடுவதற்கான சட்ட முன்வரைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலாது என்பதால் தான் அவற்றை முதலில் அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கவும், பின்னர் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றவும் மத்திய அரசு முயல்கிறது. காப்பீட்டு முன்வரைவு பற்றி ஆய்வு செய்த மாநிலங்களவை தெரிவுக் குழு அதுகுறித்த அறிக்கையை அவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், அம்மசோதா மாநிலங்களவையின் உடைமையாக மாறிவிட்டது. இத்தகைய சூழலில் இதை அவசர சட்டமாக பிறப்பிப்பது நாடாளுமன்ற நடவடிக்கைகளின் புனிதத்தை கெடுக்கும் செயலாகும்.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்னும் இரு மாதங்களில் தொடங்கவுள்ளது. மோடி அரசு ஜனநாயகத்தை மதிப்பதாக இருந்தால், சர்ச்சைக்குரிய இரு மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்கி நிறைவேற்ற முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், இரு மாதங்கள் கூட பொறுத்திருக்க முடியாமல் அவசர சட்டத்தை பிறப்பிப்பதன் மூலம் மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை அரசு செய்திருக்கிறது. அவசர சட்டம் என்பது தவிர்க்கமுடியாத தருணத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய வாய்ப்பாகும். இதை விதிவிலக்காகத் தான் கருத வேண்டுமே தவிர விதியாக மாற்ற முயலக் கூடாது. இதேநிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்கி விடக் கூடிய ஆபத்து இருப்பதை ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.
எனவே, காப்பீட்டுத் துறை நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49% ஆக அதிகரிக்கவும், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விடுவதற்கும் வகை செய்யும் அவசரச் சட்ட பரிந்துரைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.