தமிழகம்

நக்ஸலைட்டுகள் கம்யூனிஸ தீவிரவாதிகள்: எம்.பி. தருண் விஜய் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

'நக்ஸலைட்டுகள் கம்யூனிஸ தீவிரவாதிகள்' என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்த கருத்துக்கு மாநிலங்களவையில் இன்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தை அவையில் தெரிவித்ததற்காக எம்.பி. தருண் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தினர்.

டி.ராஜா பேசுகையில், கம்யூனிஸ கொள்கைக்கும் தீவிரவாதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் யாருடைய தகுதிச் சான்றிதழையும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. இடது சாரி தொண்டர்கள் பலர் தேச விடுதலைக்காக தங்களது உயிரையும் தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது, 'நக்ஸலைட்டுகள் கம்யூனிஸ தீவிரவாதிகள்' என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சீதாராம் யெச்சூரியும் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட அவையின் துணைத்தலைவர் பி.ஜெ.குரியன், "அவைக் குறிப்பில் இருந்து எம்.பி. தருண் விஜயின் கருத்துகள் நீக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் உறுப்பினர் மன்னிப்புக்கேட்கும்படி நான் அறிவுறுத்த முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT