பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் சர்ச் சாலையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பு நடந்த பெங்களூர் சர்ச் சாலை என்பது சென்னையின் தி.நகர் போன்ற வர்த்தக பகுதியாகும். புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் அங்கு குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பெங்களூரில் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக வைக்க நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை போலீஸார் சோதனை செய்து உறுதிசெய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க கடலோர காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேர வாகன சோதனையை அதிகரிக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வணிக வளாகங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாறுவேடத்தில் போலீஸார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.