கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு ரூ.180 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
கும்பகோணத்தில் 2016, பிப்ரவரி 22-ம் தேதி மகாமகத் திருவிழா தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்கு தேவையான வசதிகளை செய்ய தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை வாரியான ஆய்வு கூட்டத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உதவி ஆட்சியர் மந்திரி கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, தங்களது துறைகள் சார்பில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தெரிவித்தனர்.
பின்னர் ஆட்சியர் சுப்பையன் பேசியது, “கும்பகோணம் பகுதியில் உள்ள 69 கோயில்கள் மகாமகத்தையொட்டி திருப்பணிகள் செய்யப்பட உள்ளன. கும்பகோணம் சுற்றுப் பகுதியில் உள்ள மற்ற கோயில்களையும் திருப்பணி செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளது. மகாமக குளக் கரைகளில் மத உணர்வை தூண்டும் வகையில் சிலர் நோட்டீஸ் ஒட்டுவதாகத் தகவல் வந்துள்ளது. இதனை காவல் துறையினரும் அலுவலர்களும் கண்டுபிடித்து தடுக்க வேண்டும்.
கும்பகோணம் நகராட்சி பகுதிகள் மற்றும் நகரைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை தயாரித்து மகாமக விழா திட்டத்தில் சேர்க்கப்படும். மின்வாரியம் சார்பில் நகரில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைவுபடுத்த வேண்டும்.
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்பாக இதுவரை 5 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை சார்பிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது குறித்து இதுவரை ரூ. 180 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறன்றன” என்றார் சுப்பையன்.