தமிழகம்

பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூடக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

செல்போன் உதிரிபாகங்கள் தயாரித்து வரும் பாக்ஸ்கான் தொழிற் சாலை டிசம்பர் 24-ம் தேதியுடன் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் 1700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட போது 8000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நோக்கியா மூடப்பட்டதால், உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் வரவில்லை என்று கூறி கம்பெனியை மூடப்போவதாக பாக்ஸ்கான் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், நோக்கியா மூடிய பிறகும், உதிரி பாகங்கள் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், 500 பன்னாட்டு நிறுவனங்களில் 30-வது இடத்தில் இருக்கும் பாக்ஸ்கான் வேறு செல்போன் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து தர முடியும். ஆனால், இதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பாக்ஸ்கான் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வரி சலுகை, மலிவு விலையில் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று கோடி கோடியாய் லாபம் ஈட்டி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டால், விவசாய நிலங்களை குறைந்த விலையில் வாங்கி சிறப்பு பொருளா தார மண்டலம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சீர்குலைந்து விடும்.

தொழிலாளர்களின் வேலையை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

SCROLL FOR NEXT