தமிழகம்

மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் அபாயம்: நோய்களை பரப்பும் இடமாகிறது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

கோ.கார்த்திக்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை யில் மருத்துவக்கழிவுகளை அதே வளாகத்திலேயே கொட்டுவதால் நோயாளிகளும் அவர்களை பார்க்க வருபவர்களும் குப்பைகளை அகற்றும் நகராட்சி தொழிலாளர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 38 வார்டுகள் உள்ளன. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். 900-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி சார்பில் 5 குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. இதில், அத்தியாவசிய குப்பை மட்டுமே கொட்ட வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவக்கழிவுகளும் நோயாளிகளின் உடம்பில் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றபடும் உடல் உறுப்புகள் உள்ளிட்டவற்றையும் குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர்.

மருத்துவமனை வளாகம் முழுவதும் எப்போதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமாக இருக்க வேண்டிய இடம் சுகாதார சீர்கேட்டுடன் திகழ்கிறது. இதனால் நோயாளிகள் மேலும் பாதிப்புக்குள்ளாவதுடன் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களும் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் சந்திசேகர் கூறும்போது, ‘பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டிய மருத்துவ கழிவுகளை, மருத்துவமனை வளாகத்தி லேயே கொட்டுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் அதை அப்புறப்படுத்தும் நகராட்சி துப்புரவு பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை தரம்பிரிக்கும் போது பயன் படுத்தப்பட்ட ஊசிகள் அவர்கள் கைகளில் குத்திவிடுவதால் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் நீடிக்கிறது.

மருத்துவுக்கழிவுகளை கொட்டுவது பற்றி மருத்துவமனை நிர்வாகத்துக்கு நகராட்சி 5 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவத்துறையிலும் புகார் அளித்துள்ளது. ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மருத்துவமனை முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது’ என்றார்.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: ஒருசில பணியாளர்களின் கவனக்குறைவாக இங்கே வீசியிருக்கலாம். இதுகுறித்து விசாரிக்கப்படும். மேலும், மருத்துவமனையில் கழிவு பொருட்களை அகற்றுவதற்காக, உள் வார்டுகளில் 3 விதமான தரம் பிரிக்கும் குப்பை தொட்டி அமைத்து லாரி மூலம் பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றி வருகிறோம். இனி மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர்.

SCROLL FOR NEXT