தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டி நிலைகொண்டுள்ளது. இது எந்த திசையிலும் வேகமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ., சென்னை மாதவரத்தில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.