தமிழகம்

லாரி ஓட்டுநர் மார்பைத் துளைத்த 2 அடி நீளமுள்ள சவுக்குக் கம்பு அறுவை சிகிச்சையில் அகற்றம்: வேலூரில் அரசு மருத்துவர்கள் சாதனை

செய்திப்பிரிவு

லாரி ஓட்டுநரின் மார்பைத் துளைத்த 2 அடி நீளமுள்ள சவுக்குக் கம்பை, வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், 5 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம், சோமிநேந்தல் பகுதியைச் சேர்ந்த வர் சிவக்குமார்(32). லாரி ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு அடுத்த முருகபாடி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதில் குடிசை வீட்டில் இருந்த 2 அடி நீளமுள்ள சவுக்குக் கம்பு, சிவக்குமாரின் இடது பக்க மார்பில் குத்தி முதுகுப் பக்கமாக வெளியே வந்து நின்றது.

உயிருக்குப் போராடிய சிவக்குமாரை அப்பகுதியினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சந்திரமோகன், ராஜவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை நேற்று அதிகாலை 4 மணிக்கு முடிந்தது. சிவக்குமார் உடலில் பாய்ந்த 2 அடி நீள சவுக்குக் கம்பை அரசு மருத்துவர்கள் அகற்றினர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறும்போது, ‘‘சிவக்குமாரின் மார்பில் பாய்ந்த சவுக்குக் கம்பு மறுபக்கம் வெளியேறியதால் நுரையீரல், கல்லீரல், இரைப்பை, ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டன. ரத்தக் குழாயில் 2 இடங்களில் ஓட்டை விழுந்ததால் அவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் இதை ஒரு சவாலாக ஏற்று, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT