தமிழகம்

கோவையில் தொடங்கியது யானைகளுக்கான நலவாழ்வு முகாம்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று காலை 10.35 மணிக்கு தொடங்கியது. ஜனவரி 27-ம் தேதி வரை முகாம் நடைபெறும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார்.

தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையோரத்தில் சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் நடக்கிறது. கடந்த ஆண்டு 4 ஏக்கர் பரப்பில் முகாம் இருந்தது.

நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்து அறநிலையத் துறை கூடுதல் செயலாளர் கண்ணன், கோவை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், அறநிலையத் துறை ஆணையர் தனபால், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

30 யானைகள் பங்கேற்பு

பல்வேறு கோயில்களில் இருந்து லாரிகள் மூலமாக மொத்தம் 30 யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. சமீபத்திய மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்கெட், குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு ஒருசில யானைகள் மட்டும் குளிக்க வைக்கப்பட்டன. பின்னர் விநாயகர் பூஜை நடத்தப்பட்டது.

வரிசையாக நின்ற யானைகளில் முதலாவதாக ரங்கம் ஆண்டாள் யானைக்கு பழம், கரும்பு, வெல்லம் உள்ளிட்ட உணவுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் வழங்கினர்.

தற்போது, காட்டு யானைகளின் இடப்பெயர்ச்சி காலமாகும். கேரள வனப் பகுதியில் இருந்து தமிழக வனப் பகுதிக்குள் காட்டுயானைகள் இடப்பெயர்ச்சி நவம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கும். கடந்த ஆண்டு முகாமின்போது பலமுறை காட்டு யானைகள் முகாம் பகுதிக்குள் ஊடுருவி கோயில் யானைகளை தாக்கின. இதைத் தடுப்பதற்காக நடப்பு ஆண்டு முகாமைச் சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 கி.மீ. சுற்றளவுக்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்றிருக்கும் யானைகளில் பெரும்பாலானவை பெண் யானைகள் என்பதால் காட்டு யானைகள் மோப்ப சக்தி மூலமாக ஊடுருவலாம் என்ற அச்சமும் உள்ளது.

பாகன்களுக்கும் கலந்தாய்வு

முகாம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் கூறுகையில், முகாமுக்கு வருவதற்கு முன்பாகவே யானைகளுக்கு எடை அளவிடப்பட்டது. எடை குறைவாக இருந்தால், முகாமில் சத்துள்ள உணவு, பசுந்தீவனம் வழங்கப்படும். எடை அதிகமாக இருந்தால் நடைபயிற்சி வழங்கப்படும்.

யானைகளைக் கட்டுப்படுத்தும் பாகன்களுக்கும் கலந்தாய்வு வழங்கப்பட உள்ளன. யானை கள் ஒரு கி.மீ. தூரம் சென்றுவர நடைப்பயிற்சி பாதை அமைக்கப் பட்டுள்ளது. 48 நாட்களுக்கு யானைகளுக்கும், பாகன்களுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் தயாராக வைக்கப் பட்டுள்ளன என்றார்.

SCROLL FOR NEXT