தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலம் நீடிப்பதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று புதிதாக உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வரும் 27-ம் தேதி மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. தமிழகத்தில் பருவ காலத்தில் சுமார் 44 செ.மீ. மழை சராசரியாக பெய்யும். இதுவரை சுமார் 40 செ.மீ. மழை சராசரியாக பெய்துள்ளது. தற்போது உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்தப் பருவ காலத்தில் போதிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.