புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதை கண்டித்து அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அரவிந்தர் ஆசிரமத்தை கையகப்படுத்த வேண்டும். மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்தும் ஆசிரமத்தின் சட்டவிரோத நடவடிக்கை குறித்தும் விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பு தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் தமிழ் அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போரட்டத்திற்கு காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சிலர் சட்டப்பேரவை வளாகத்திற்குள் சென்றனர்.
இதனையடுத்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காமராஜர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர், ரயில் மறியலில் ஈடுபட்டனர்.