தமிழகம்

ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது: திருச்சியில் சுற்றி வளைத்தது தனிப்படை

செய்திப்பிரிவு

கோடம்பாக்கத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறை வாக இருந்த மாணவனின் தந்தை அருளானந்தத்தை திருச்சியில் தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4 வது குறுக்கு தெருவில் லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. பள்ளியில் விசில் அடித்ததால் அர்னால்டு என்ற மாணவரை உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் ராஜ் தண்டித்தார்.

இதனால் அவரை பள்ளிக்குள் புகுந்த ஒரு கும்பல் தாக்கியது. இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் கோடம்பாக்கம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. மாணவரின் தந்தையான அருளானந்தம் தூண்டுதலின் பேரில்தான் ஆசிரியர் தாக்கப்பட்டார். அருளானந்தம் நடத்தும் ரிச் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்தான் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஊழியர்கள் 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொழில் அதிபர் அருளானந்தம், அவரது சகோதரர் செபாஸ்டின் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அருளானந்தத்தின் உறவினர்கள் திருச்சியில் உள்ளனர். எனவே ஒரு தனிப்படை திருச்சியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.

இந்நிலையில் திருச்சி அரியமங்களம் பால்பண்ணை அருகில் நேற்று முன்தினம் இரவில் அருளானந்தத்தை போலீஸார் கைது செய்தனர். நேற்று காலை 4 மணியளவில் அருளானந்தம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அசோக் நகர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆசிரியர் பாஸ்கர் ராஜ் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் கூறிய தகவல்களை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். நேற்று காலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அருளானந்தம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அருளானந்தம் அடைக்கப்பட்டார். அருளானந்தத்துடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்துக்கு சொந்தமான 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி. 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். 2009-ல் சென்னை வந்தவர் சென்னை புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். திருச்சியில் காந்தப்படுக்கை மோசடியில் 11-வது குற்றவாளியாக இவரது பெயர் உள்ளது.

அருளானந்தத்தின் சகோதரர் செபாஸ்டின் மற்றும் விஜயகுமார், மைதீன் ஆகிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT