தமிழகம்

புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்டால் ராஜினாமா: மாநில இளைஞர் காங். தலைவர் சபதம்

செ.ஞானபிரகாஷ்

“புதுச்சேரி மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது நிச்சயம். இது நடக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்று புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை ’தி இந்து’நிருபரிடம் பேசிய இளையராஜா கூறியதாவது: ‘’புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்டியிட வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கெனவே ராகுலிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திலும் ராகுல் காந்தி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்தாவ் உள்ளிட்டோர் புதுச்சேரி வேட்பாளர் தேர்வு குறித்து பேசினர்.

உங்களுக்கு போட்டியிட விருப்பமா என என்னைக் கேட்டனர். ஆனால், நாராயணசாமியைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நான் கூறினேன்.

என்.ஆர்.காங்கிரஸ் செயல்பாடு கள் குறித்து விசாரித்த அவர்கள், புதுச்சேரியில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டனர். அதற்கு, நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெறுவோம். அப்படி இல்லாவிட்டால் நான் எனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தேன். பல மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸார் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும்போது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்; பயமா? என்று அவர்கள் கேட்டனர்.

‘ஏற்கெனவே நாராயண சாமியை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் கையெழுத்திட்டு தலைமைக்கு கடிதம் அளித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் நாராயண சாமியை வேட்பாளராக நிறுத்தச் சொல்கிறோம்’ எனக் கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT