விலங்குகளில் மின்னல் வேகத்தில் ஓடக் கூடியவை மான்கள். இதில் புள்ளிமான், கேளை ஆடு, கடமான்களைக் காட்டிலும் `வெளிமான்' வகைகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. வெளிமான்களை மான் எனச் சொல்ல மாட்டார்கள். அதனால், ஆங்கிலத்தில் இவற்றை deer என்பதற்குப் பதில் Ungulate என அழைப்பார்கள்.
மான்களுக்கு ஆண்டுக்காண்டு கொம்புகள் விழுந்து முளைக்கும். ஆனால், வெளிமானுக்கு சுருள் வடிவக் கொம்புகள் நிரந்தரமாக இருக்கும். அவை விழுந்து முளைக்காது. 50 ஆயிரம் மான்கள் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் வெளிமான்கள், இந்தியக் காடுகளில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 50,000-க்கும் குறைவில்லாமல் காணப்படுகின்றன.
தற்போது தமிழகத்தில் வெளிமான் வாழ்விடமான புல்வெளிக் காடுகள் சுருங்குவதால், இந்த இனங்கள் அரிதாகி வருகின்றன. கோடியக்கரை சரணாலயம், கிண்டி தேசியப் பூங்கா, வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நான்காவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மோயார் முதல் தெங்குமரஹடா செல்லும் வழியில் திறந்தவெளிக் காடுகளில் இவ்வகை மான்கள் காணப்படுகின்றன.
அதிகமாக வேட்டையாடப்படும் விலங்கு இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: அதிகமாக நீர் குடிக்கும் வெளிமான்கள் நீருக்காக காட்டில் நெடுந்தொலைவு ஓடக்கூடியவை. வேட்டையாடுதல், புல்வெளிக் காடுகளை அழிப்பது போன்றவற்றால் வெளிமான்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் அதிகமாக வேட்டையாடப்படும் விலங்கே வெளிமான்கள்தான். சிவிங்கிப் புலிகள்தான் இதனை அதிக அளவில் அடித்து சாப்பிடும். ஆனால், 1948-ம் ஆண்டோடு சிவிங்கிப் புலி இனம் இந்தியாவில் அழிந்தேவிட்டது. தற்போது மனிதர்களால் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வெளிமான் இனங்கள் வேட்டையாடப்படுகின்றன.
இந்தி நடிகர் சல்மான்கான் ராஜஸ்தானில் வேட்டையாடியது இந்த வெளிமானைத்தான். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியும் இந்த வகை மானை வேட்டையாடிய வழக்கில்தான் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் காளிதாசன் கூறியதாவது: திறந்தவெளிக் காடுகளில் மட்டுமே வாழக்கூடியவை இந்த வெளிமான்கள்.
திறந்தவெளிக் காடுகளில்தான் அதிக அளவு புற்கள் காணப்படும். இந்தக் காடுகளில்தான் இவை வேகமாக ஓடி தப்பித்துக்கொள்ளும். அடர்ந்த காடுகளில் புல் முளைக்காது. மேலும் இவற்றால் அங்கே ஓடி தப்பிக்கவும் முடியாது என்பதால் அடர்ந்த காடுகளில் இவை வசிப்பதில்லை. சமீபகாலமாக, சீமைக் கருவேல மரங்கள் பரவுவதன் காரணமாக, வெளிமான்களின் வாழ்விடம் சுருங்கி வருவதால் அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வனத்துறையில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி முழுமையானால், வெளிமான்கள் வசிப்பதற்கு உகந்த சூழல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.