வில்லிவாக்கம் பாரதி நகரில் குடிநீர் குழாயின் மேலே கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரியிலிருந்து சென்னை நகரத்துக்கு வரும் குடிநீர், வில்லிவாக்கம் பாரதி நகர் வழியாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு 3 குழாய்கள் மூலம் வருகிறது. பாரதி நகர் 2-வது தெருவில் இந்த குழாய்களின் மேலேயே குடிசை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 3 குழாய்களில் ஒரு குழாய் மிகவும் பழையது என்பதால், அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிசைகள் அகற்றப்படுமோ என்று அப்பகுதியினர் அச்சப்படுகின் றனர்.
இந்நிலையில் பாரதி நகரில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களை கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் நடத்தி வருகிறது. இது குறித்து 94-வது வார்டு கவுன்சிலர் வசந்தா வெங்கடேசன் கூறும்போது, “ஓலை வீடுகளில் இருப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பாரதி நகரில் இருப்பவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்திட்டத்தில் அவர்கள் வசிக் கும் இடத்திலேயே வீடு கட்டிக் கொடுக்கப்படும். ஆனால், இங்கு குடிநீர் குழாய் பழுதடைந் துள்ளதால்,வீடுகளை அகற்ற வேண்டியிருக்கலாம்” என்றார்.
பாரதி நகரில் வசிக்கும் சாலை யோர வியாபாரி இந்திராணி (65) கூறும்போது, “நான் 30 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன். எனது மகன் இறந்துவிட்டான். அனைவரும் இந்த இடத்தைவிட்டு போக சம்மதித்தால், நானும் காலி செய்துவிடுவேன். ஆனால், நான் கடைசி வரை இங்குதான் வாழ வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்றார்.
அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா கூறும்போது, “எங்க ளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எல்லாம் இந்த முகவரியில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். தற்போது என் வீட்டில் 4 குடும்பங்கள் உள்ளன. வீட்டை மாற்றினால், எல்லோருக்கும் வீடு கிடைக்குமா என்று தெரியவில்லை” என்றார்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “ 3 குழாய்களில் ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டது. எனவே, அதை உடனே மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. மீதமுள்ள குழாய்களையும் விரைவில் மாற்ற வேண்டும். இவற்றில் பழுது ஏற்பட்டால், சென்னை நகருக்கு குடிநீர்வரத்து பாதிக்கும். பெரும்பாலான மக்களின் நலனே முக்கியம். எனவே குழாய்களை மாற்றும்போது வீடுகளை அகற்ற வேண்டியிருக்கும்” என்றார்.