‘நாட்டிலேயே அதிகளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது’ என, சென்னை ஏற்றுமதி தொழில் மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் சவுத்ரி கூறினார்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சென்னை ஏற்றுமதி தொழில் மண்டலம் (மெப்ஸ்) - சிறப்பு பொருளாதார மண்டலம் சார்பில், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் ஏ.கே.சவுத்ரி, இணை வளர்ச்சி ஆணையர் ஸ்வர்ணா, எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
பின்னர், சவுத்ரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. குறிப்பாக, பொருளாதார நடவடிக்கைகளை பெருக்குதல், உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தல், இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை பெருக்குதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
மேலும், மத்திய அரசின் இந்தியாவில் உருவாக்குவோம் என்ற லட்சியத்தை நனவாக்கும் பணியிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஈடுபட்டு வரு கின்றன.
கடந்த 2003-ம் ஆண்டு நாடு முழுவதும் ஏழு ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்கப் பட்டன. பின்னர், அவை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டன. மத்திய அரசின் சிறப்பு பொரு ளாதார மண்டல திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 56 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதில் 36 மண்டலங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இதன் மூலம், நாட்டிலேயே அதிகளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக அரசின் சிப்காட் மற்றும் எல்காட் நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க பெரும் பங்காற்றி யுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தற்போது 445-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீடு ரூ.5,500 கோடியிலிருந்து ரூ.36,506 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களும் இணைந்து, 2013-14ம் ஆண்டில் ரூ.79,556 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளன. 2.68 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளது.
இவ்வாறு சவுத்ரி கூறினார்.