எம்.ஏ.எம்.ராமசாமியின் சுவீகார புதல்வர் முத்தையா, செட்டிநாடு `சிலிக்கான்' நிறுவன தலைவர் பதவியில் இருந்து எம்.ஏ.எம்-மை நீக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.
ஜப்பான் நிறுவன கூட்டுப் பங்களிப்புடன் செட்டிநாடு சிலிக்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஜப்பான் நிறுவனத்துக்கு சுமார் 20 சதவீத பங்குகள் உள்ளன. தன்னிடம் இருந்த பங்குகளில் சுமார் 30 சதவீதத்தை முத்தையாவுக்கு இனாமாக கொடுத்தது போக இப்போது, எம்.ஏ.எம். வசம் 9 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், தனக்கு எதிராக எம்.ஏ.எம்.ராமசாமி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, செட்டிநாடு சிலிக்கான் நிறுவன தலைவர் பதவியில் இருந்து எம்.ஏ.எம்-மை நீக்குவதற்கான நடவடிக்கையில் முத்தையா இறங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: அரண்மனையில் உள்ள புல் தரையில் எம்.ஏ.எம். நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அரண்மனையில் இருந்து புல் தரைக்குச் செல்லும் வாசலை அண்மையில் பூட்டி காவலுக்கு ஆள் போட்டு, எம்.ஏ.எம்-மை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
செட்டிநாடு குழும நிறுவனங் களில் எம்.ஏ.எம்-முக்கு வர வேண்டிய நியாயமான பணத்தைக் கேட்டால் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிக்கிறார்கள்.
அண்மையில், காந்தி நகர் கல்வி அறக்கட்டளையில் இருந்து முத்தையாவை எம்.ஏ.எம் நீக்கிதையடுத்து, மற்ற அறக்கட்டளைகளில் இருந்து தங்களை நீக்கக் கூடாது என முத்தையா தரப்பினர் நீதிமன்ற தடை வாங்கியுள்ளனர்.
காந்தி நகர் அறக்கட்டளையின் ‘செட்டிநாடு ஹரி வித்யாலயம்’ பள்ளியில் அட்மிஷனுக்கு லட்சக் கணக்கில் நன்கொடை கேட்பதாக, அறக்கட்டளைத் தலைவர் எம்.ஏ.எம்-முக்கு புகார்கள் வந்தன. நன்கொடை வசூலிக்கக் கூடாது எனப் பள்ளிக்கு எம்.ஏ.எம். கடிதம் எழுதியதுடன், இப்பள்ளியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறார் எம்.ஏ.எம். இதனால், மார்ச் மாதம் முடிக்க வேண்டிய அட்மிஷன்களை இப்போதே முடித்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, செட்டிநாடு ‘சிலிகான்' நிறுவன தலைவர் பதவியில் இருந்து எம்.ஏ.எம்-மை நீக்குவதற்காக அடுத்த வாரத்தில் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டும் முயற்சியில் இருக்கிறார் முத்தையா.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.