தமிழகம்

கட்டண தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு? - தி.மலை அண்ணாமலையார் கோயில் முற்றுகை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

கோயிலுக்குள் வரும் பக்தர்களுக்கு கட்டண தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் முன்னுரிமை அடிப்படையில் பொது தரிசன வழியாக அனுமதித்துவிட்டு, கட்டண தரிசன டிக்கெட் வைத் துள்ளவர்கள் மட்டும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வழங்கப்படும் கட்டண தரிசன டிக்கெட் வழங்கும் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனால், அதிருப்தி அடைந்த பக்தர்கள், அண்ணாமலையார் கோயில் உள்ளே உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “கட்டண தரிசன டிக்கெட் ரூ.500 என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டுள்ள கட்டண தரிசன டிக்கெட்களில், சில நூறு டிக்கெட்களை மட்டும் விற்பனை செய்துள்ளனர்’’ என்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை, கோயில் ஊழியர்கள் சமசரம் செய்து திருப்பி அனுப்பினர்.

தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறித்து கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கேட்ட போது, உரிய பதில் கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT