வருமான வரித்துறைக்கு ரூ.2 கோடி கட்டிவிட்டதாக ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ம் ஆண்டுக்கான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி இருவர் மீதும் வருமானவரித் துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததற் கான அபராதத் தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை, அபராதத்துடன் வரி செலுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து வரும் நீதிபதி தட்சணா மூர்த்தி விடுப்பு எடுத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கயல்விழி முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா சார்பில் அவர்களின் வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா, சசிகலா சார்பில் கொடுக்கப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் 1990 91ம் ஆண்டுக்கு ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 330-ம், 1992-93ம் ஆண்டுக்கு ரூ.65 லட்சத்து 67 ஆயிரத்து 872-ம் அபராதத்துடன் வருமான வரி கட்டணத்தை செலுத்திவிட்டது.
அதேபோல தனிப்பட்ட வருமான வரிக் கணக்காக ஜெயலலிதா ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887-ம், சசிகலா ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 972-ம் செலுத்திவிட்டனர். ஆக மொத்தம் ஒரு கோடியே 99 லட்சத்து 93 ஆயிரத்து 61 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இறுதி உத்தரவை வருமான வரித்துறை பிறப்பிக்கவில்லை.
எனவே, இந்த வழக்கு விசா ரணைக்காக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராகத் தேவையில்லை. மேலும் வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கயல்விழி, வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.