தமிழகம்

10 ஆண்டுகளாகியும் தீராத சுனாமி சோகம்

செய்திப்பிரிவு

கடந்த 2004-ம் ஆண்டின் இதே நாளில்தான் ஆழிப்பேரலை தாக்கியது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் உயர்ந்ததால் கடலோரப் பகுதிகள் பெருத்த சேதம் அடைந்தன. இந்தியா உட்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 7,923 பேர் இறந்தனர். சென்னை மற்றும் புறநகரில் 131 பேர் இறந்தனர். ஏராளமானோர் வீடு இழந்தனர். அந்த சோகத்தில் இருந்து மீனவர்களும் கடலோர மக்களும் இன்னும் மீளவில்லை.

மகனைப் பறிகொடுத்த தாய்

சென்னை சீனிவாசபுரத்தை சேர்ந்த தம்பதி ராமன் – தனலட்சுமி. இவர்களது நாலரை வயது மகன் கார்த்தி, சுனாமிக்கு பலியானான். இன்றுவரை மகனை நினைத்து வேதனைப்படும் தனலட்சுமி கூறுகிறார்..

‘‘அவனைப் பத்தி கேட்டாலே அழுகை வருது. பத்து வருசம் போனதே தெரியல. இன்னிக்கு நடந்தமாதிரி இருக்கு. வீட்டு வாசல்ல விளையாடிட்டிருந்தான். திடீர்னு கடல் பொங்கிட்டு வந்துச்சு. வீட்டுக்குள்ள ஒரு ஆள் உயரம் வரை கடல் தண்ணி. மகனை வாரிக்கிட்டு போய்டிச்சு. அவன் போய்ட்டான்கிறதுகூட, தண்ணி வத்தினப்புறம்தான் தெரிஞ்சது. மூத்த மகன் கடைக்குப் போயிருந்ததால தப்பிச்சான். ஆனாலும், எங்களைவிட்டுப் போன இளைய மகனை நெனச்சாலே அழுகை வருது. (கதறுகிறார்) அவனை இழந்த துக்கத்துல குடி, சிகரெட் ரெண்டையும் விட்டுட்டார் என் கணவர். என் புள்ள தெய்வமாகி, என் புருசனை மனுசனாக்கிட்டான். தெய்வமா அவனைக் கும்புடறேன்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

ஒரே வீட்டில் 3 உயிர்கள்

சுனாமிக்கு அம்மா, அக்கா, பாட்டி என 3 பேரை பலிகொடுத்தவர் தீபா. அவர் கூறுவது..

‘‘அன்னிக்கி வீட்ல நான், 3 அக்கா, அப்பா, அம்மா, பாட்டி இருந்தோம். காலைல 9 மணி இருக்கும். ‘கடல் பொங்கிட்டு வருது’ன்னு சொல்லிக்கிட்டே சிலர் தலைதெறிக்க ஓடுனாங்க. உடனே வெளியே வந்து பார்த்தோம். அணை உடைஞ்சது மாதிரி, ஊருக்குள்ள கடல் தண்ணி புகுந்திச்சு.

ஆளுக்கொரு பக்கமா ஓடினோம். அந்த பதற்றத்துல ஒண்ணுமே புரியல. சில மணி நேரம் கழிச்சுப் பார்த்தா, அம்மா, அக்கா, பாட்டியைக் காணோம். எங்கு தேடியும் கிடைக்கல. பக்கத்துல இருக்கிற ஓடையில உடல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக சொன்னாங்க. ஓடிப்போய் பார்த்தோம். சேறும், சகதியுமாக இருந்த 3 உடல்களைக் கொடுத்தாங்க. எங்கள் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தவங்களை சுனாமிக்கு பறிகொடுத்துட்டு தவிக்கிறோம்’’ என்றார் கலங்கியபடி.

வாழ்க்கையே சீர்குலைந்தது

சீனிவாசபுரம் எம்.பிச்சைராஜ் (65) கூறுவதாவது:

15 வயசுலேர்ந்து மீன்பிடி தொழில் செய்றேன். கடலுக்குப் போய்ட்டு அப்பதான் திரும்புனேன். படகை நிறுத்திட்டுப் போய் 10 நிமிசம்கூட இருக்காது. அதுக்குள்ள சுனாமி வந்து என் பெரிய படகை பாய்மாதிரி சுருட்டிக் கொண்டுபோய்டிச்சு. அதன் மதிப்பு ரூ.2.5 லட்சம். எனக்கு சோறு போட்டுட்டிருந்த படகு போனதுலேர்ந்து, என் வாழ்க்கையே போய்டுச்சு.

புது படகு வாங்க உதவுங்கன்னு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். முதல்வர் தனிப்பிரிவிலும் போட்டேன். இதுவரை நிவாரணம் வரல. அலைஞ்சதுதான் மிச்சம். ஆனாலும், பொழப்பு இருக்கே. கடன் வாங்கி ரூ.30 ஆயிரத்துல சின்ன படகு வாங்கி மீன்பிடிக்கிறேன். என் வாழ்க்கையையே சுனாமி சீரழிச்சிடுச்சு’’ என்றார் வேதனையுடன்.

அதே பகுதியை சேர்ந்த பூவரசு கூறும்போது, ‘‘சீனிவாசபுரத்துல 7 பெரிய படகு இருந்திச்சு. அத்தனையும் சுனாமியில போய்டிச்சு. அப்புறம், பெரிய படகுல போய் மீன்பிடிக்கிறதே இந்த பகுதியில இல்லாம போய்டிச்சு. நெஜமாவே சுனாமியால பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் முழுமையா நிவாரணம் கிடைக்கல’’ என்றார்.

கடல்தான் வாழ்வு.. கடல்தான் சுவாசம்

தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெய பாலையன் கூறியதாவது:

சுனாமி ஏற்படுத்திய சுவடுகள் அங்கங்கே நினைவுச் சின்னமா இருக்கு. மாமல்லபுரம் அருகே விளம்பூர் கடலோர கிராமத்துல சுனாமி விட்டுச் சென்ற தென்னை மரம், சிதைந்த வீடுகளைப் பார்க்கும்போதே சோகம் ஏற்படும். காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ள ஆலம்பரை கடலோர கிராமம், பழவேற்காடு அருகே உள்ள சாத்தாங்குப்பம் கிராமத்தை சுனாமி சூறையாடிவிட்டது. அங்கிருந்த மீனவ மக்கள் காலிபண்ணி வேற ஊர்களுக்கு போய்ட்டாங்க.

மாநகரத்துக்குள்ள பரபரப்பான பகுதியில பல லட்சம் மதிப்புல வீடு கட்டிக்கொடுப்பதை மீனவர்கள் விரும்பவில்லை. மீன்பிடித் தொழில்தான் அவங்களுக்கு உயிர்மூச்சு. குடிசை வீடானாலும் கடலோரத்துல இருக்கணும்னு விரும்புறாங்க. அவங்களுக்கு வாழ்வும் கடல்தான். சுவாசமும் கடல்தான்.

நிவாரணம் என்ற பெயரில் மீனவ மக்களை கண்ணகி நகர், துரைப்பாக்கம் போன்ற இடங்களுக்கு இடம்பெயரச் செய்வது கொடுமையிலும் கொடுமை. மீனவ மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதே உண்மையான நிவாரணம்.

சுனாமிக்கு பிறகு அடிக்கடி மாறி வரும் கடல் சூழல்

சுனாமிக்கு பிறகு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீனவர்களின் வாழ்க்கையின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடலைப் பற்றி மீனவர்களுக்கு இருந்த ஆழமான பாரம்பாரிய அறிவை ஆட்டம் காண செய்திருக்கிறது. இத்தனை காலம் தாங்கள் பார்த்து வந்த கடல் திடீரென்று வித்தியாசமாக மாறுவதை அவர்களால் உணர முடிகிறது. எனினும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர் அவர்கள்.

மீனவர் மக்கள் முன்னணியின் தலைவர் ஜெ.கோசுமணி கூறும்போது, "கடலில் உள்ள சேர் பகுதிகளில் தான் மீன்கள் அதிகமாக கிடைக்கும், குறிப்பாக இறால் போன்ற மீன்கள் கிடைக்கும். ஆனால், சுனாமிக்கு பிறகு சேர் போன்ற பகுதிகள் கரைந்து விட்டதால், மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களில் அரசு திட்டமிட்டு பல தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

எண்ணூர், பழவேற்காட்டில் உள்ள ரசாயன நிறுவனங்கள் தங்கள் கழிவுகளை கடலில் கலக்கின்றன. கடல் நீரை குடிநீராக்குவதால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்றாலும், அங்கிருந்து பிரிக்கப்படும் உப்பு கடலில் விடப்படுகிறது. இதனால், கடலில் உப்புத்தன்மை அதிகமாகி மீன் வளம் பாதிக்கப்படும்," என்றார்.

"சுனாமிக்கு பிறகு, கடலில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை எங்களால் உணர முடிகிறது. முன்பு கிடைத்து வந்த தட்ட கவல, சீடை போன்ற மீன் வகைகள் தற்போது கிடைப்பதே இல்லை. அதே போல், கேரளாவில் அதிகமாக கிடைக்கும் மத்தி என்ற மீன் வகை இங்கு அதிகமாக கிடைக்கிறது. ஆனால், சுனாமிக்கு பிறகு, கடலைப் பற்றிய எங்கள் கணிப்பு எல்லா நேரமும் சரியாக இருப்பதில்லை. ஒரு இடத்தில் 5 அடி ஆழம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் 6.5 அடி ஆழம் இருக்கிறது," என்கிறார் எத்திராஜ்.

"கடல் இப்போதெல்லாம் சுரப்பாக (மீன்பிடிக்க ஏதுவான சூழல் இல்லை) காணப்படுகிறது. மாதத்துக்கு 12 முதல் 15 நாட்கள் தான் கடலுக்கு செல்ல முடிகிறது. முதலில் 20 முதல் 25 நாட்கள் செல்ல முடியும்," என்கிறார் ஜானகி.

ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மீனவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு இதே தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். "வருமானம் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால், கடலை விட்டு நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். கடலில் சிற்சில மாற்றங்களே ஏற்பட்டுள்ளன. இது எங்களை எதுவும் செய்யாது," என்கிறார் லலிதா.

எதிர்நீச்சல் போட்ட எத்திராஜ்

சுனாமியால் பல்லாயிரம் பேர் பலியான அதே நாளில் மற்றவர்களைக் காக்க தங்கள் உயிரை பணயமாக வைத்து செயல்பட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நொச்சி நகரில் வசிக்கும் எத்திராஜ்.

இதுபற்றி கூறும் எத்திராஜ், “கடற்கரையில் நின்றுகொண்டிருந்த நான், பெரிய அலைகள் வருவதைப் பார்த்து முதலில் ஓட ஆரம்பித்தேன். வழியில் இருந்த குடிசைகளில் இருப்பவர்களைப் பார்த்து ஓடிவிடுமாறு கூச்சலிட்டுக்கொண்டே சென்றேன். பாதுகாப்பான பகுதிக்கு வந்தபின் திரும்பிப் பார்த்தால், குடியிருப்பில் பலரும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக துடுப்புடன் கூடிய ஒரு கட்டு மரம் நான் நின்றிருந்த சாலையில் வீசப்பட்டிருந்தது. நான் 18 வருடங்களாக மீனவனாக இருப்பதால், தைரியமாக அந்த கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றேன். கடல் அலைகளுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருந்த ஒரு பெரியவரையும் அவரது மனைவியையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தேன்” என்கிறார்.

பத்தாண்டுகளுக்குப் பின்னும் சிலிர்த்தபடி இதனைத் தெரிவித்த அவருக்கு, தன்னால் காப்பாற்றப்பட்டவர்களின் பெயர் நினைவில் இல்லை. ஆனால், இத்தகையோரின் உடனடி உதவிகள் சுனாமிப் பேரழிவிலும், மனிதநேயம் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது.

SCROLL FOR NEXT