தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியை கைப்பற்ற ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சி செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டார். ஞானதேசிகன் பதவி விலகிய அடுத்த நாளிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளர் பதவியிலிருந்து கோவை தங்கம் விலகினார். ஞானதேசிகன், கோவை தங்கம் இருவரும் தற்போது வாசனின் புதிய கட்சியில் இணைந்துள்ளனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராகி 20 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவி உட்பட ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வகித்த பல பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் இந்தப் பதவிகளை பெறுவதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறிய தாவது: தமிழ்நாடு காங்கிரஸில் வாசனுக்கு அடுத்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் குறிப்பிட்ட அளவில் ஆதரவாளர் கள் உண்டு. தற்போது வாசன் கட்சியைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில் அதற்கடுத்து பெரும் பான்மையாக உள்ள ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் முக்கிய பொறுப்பு களை பெறுவதில் உறுதியோடு உள்ளனர். குறிப்பாக கார்த்தி சிதம்பரத்தை பொருளாளராக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு பெரிய அளவில் அதிகாரமில்லை என்றாலும், மாநில அளவில் வலம் வர அந்த பொறுப்பு உதவும் என்று ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதற்காகத்தான் கட்சியின் டெல்லி தலைமையின் விருப்பத்துக்கு ஏற்ப காமராஜர் பேரை வைத்து மக்களை சந்திக்கக்கூடாது என்று கார்த்தி சிதம்பரம் பேசினார்.
இதன் பேரில் தலைமைக்கு புகார் சென்றாலும் தன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காது என்று கார்த்தி சிதம்பரம் நினைக்கிறார். ஏனென்றால் ராகுல் காந்தி பழைய தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில் தற்போது இளங்கோவ னுக்கு ஆதரவாக உள்ள வாசனின் முன்னாள் ஆதரவாளர்கள், சிதம்பரம் அணியினருக்கு முக்கிய பொறுப்புகளை கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பொருளாளர் பதவிக்கு யசோதா, ஜே.எம்.ஆரூண், உள்ளிட்டோரின் பெயர்களை பரிந்துரைக்கலாமா என்று இளங்கோவன் யோசித்து வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொருளாளர் நியமனம் குறித்து மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்ட போது, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவிக்கு யார் பேரையும் நான் பரிந்துரை செய்யவில்லை. இப்போது நான் மாவட்ட சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு தொண்டர்களை சந்தித்து வருகிறேன். இந்த சுற்றுப்பயணம் முடிந்த பிறகு பொருளாளர் நியமிக்கப்படுவார்” என்றார்.