தமிழகம்

பஸ்களில் படிக்கட்டு பயணம் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: 5 வழித்தடங்களில் செயல்பட தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை மாநகர பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதைத் தடுக்க போக்குவரத்து, காவல்துறை, பள்ளி மற்றும் கல்லூரி துறைகள் சேர்ந்து குழு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 வழித்தடங்களில் இந்த குழு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

மாநகர பஸ்களில் ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் செல்வதால் பலர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை பெருங்குடியில் பஸ் மீது லாரி மோதியதில், பஸ்ஸின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாபமாக பலியானர்கள்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பஸ் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கான புதிய பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கவும் ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிடப்பட்டது. கமிட்டியின் தலைவராக முன்னாள் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி பல்வேறு கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் படிக்கட்டு பயணத்தை கண்காணிக்க போக்குவரத்து, காவல்துறை, பள்ளி மற்றும் கல்லூரி துறைகள் இணைந்து குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த 7-ம் தேதியில் இருந்து முதல்கட்டமாக 6டி, 23சி, 29சி, 45பி, 15பி ஆகிய 5 வழித்தடங்களில் கண்காணிப்பு பணியை செய்துவருகிறது. இதற்காக 50 முக்கிய பஸ் நிறுத்தங்களில் 100 போக்குவரத்து அலுவலர்கள், 70 போலீஸார், 50 மாணவர்கள் பிரதிநிதிகள் பணியாற்றி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இக்குழு செயல்பட்டு வருகிறது. இது பஸ் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இந்த முறையை படிப்படியாக அனைத்து வழித்தடங்களிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT