தமிழகம்

டெல்டா மாவட்ட மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி டெல்டா மாவட்ட மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். நாகையில் நேற்று நடைபெற்ற நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

5 மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீன்பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசுக்கும் அதிபர் ராஜபக்சவுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக மீனவர்களை பயமுறுத்துவதற்காகவும், மீன்பிடி தொழிலில் இருந்து நிரந்தரமாக அவர்களை வெளியேற்றவும் திட்டமிட்டு இந்த கொடூரமான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும். மீனவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இன்று (நவ.2) முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் நவ.6 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது, இந்த போராட்டங்கள் பலனில்லாத நிலையில், அடுத்தடுத்து ரயில் மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT