தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பலியானதற்கான உண்மைக் காரணத்தை மறைக்கக் கூடாது என மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் அறித்துள்ள பேட்டியில் நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் இயற்கையானது என்றும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் குழந்தைகள் இப்படி இற்ப்பதாகவும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கூட ஒரேநாளில் 6 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும் எனவே அனைத்தும் சரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மரணம் குறித்து மேற்கண்ட டாக்டர்கள் தெரிவித்துள்ள கருத்து மிகவும் நியாயமற்றது. மரணம் இயற்கையா? செயற்கையா? என்பதல்ல பிரச்சனை. மாறாக, இந்த மரணங்களை தடுத்திருக்க முடியுமா? இல்லையா என்பதுதான் அடிப்படையான பிரச்சனை.
தடுக்க முடியாமல் போனதற்கு சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் பயணிக்க வேண்டிய தூரம், நேரம் மற்றும் வசதி, மருத்துவமனை வசதிகள், சிகிச்சைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், உபகரணங்கள் சீர்செய்ய முடியாத உடல்நலக் கோளாறு என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.
இவை குறித்து முழுமையான விசாரணைகள் நடத்துவதன் மூலமாகவே எதிர்காலத்ணில் இத்தகைய மரணங்கள் நிகழ்வதை தடுக்கவோ, குறைக்கவோ முடியும்.
மேலும் மேற்படி நிர்வாகிகள் போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழக சுகாதார திட்ட இயக்குநர் மாவட்டத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து கூடுதலாக 4 மருத்துவர்களும், 6 செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு கூடுதல் பயிற்சியளிப்பதற்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் அரசின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு உண்மையை மறைக்கும் வகையில் பேட்டியளித்திருப்பதாக தெரிகிறது.
குழந்தைகள் மரணத்தை புள்ளிவிபரங்கள் அடிப்படையில் நியாயப்படுத்த முனைந்திருப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 20 என்பது தேசிய சராசரியை விட குறைவானது என்பது குறைக்க வேண்டிய குழந்தைகள் மரணம் பற்றிய இலக்கே தவிர திருப்தி கொள்வதற்கான எண்ணிக்கையல்ல. கேரளா போன்ற மாநிலங்கள் இறப்பு விகிதத்தை 10-ஐ விட குறைத்து முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.
மரணங்களை இயற்கையானது என நியாயப்படுத்த முயல்வது சரியல்ல. மருத்துவர்கள் இதுபோன்ற பிரச்சினையில் தீவிரத்தை உணராத அல்லது மூடிமறைக்கும் அரசின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான பேட்டிகளை தவிக்க வேண்டுமென்றும், எதிர்காலத்தில் இத்தகைய பிழை ஏற்படா வண்ணம் தடுக்கும் முறையில் விசாரணை செய்து உரிய மருத்துவ ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் தடுக்க வாய்ப்புள்ள மரணங்கள் நிகழாமல் தடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும் இந்த மரணங்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு போதுமான நிதிஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையையே வெளிப்படுத்துகிறது.
அரசு இவற்றிற்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.