தமிழகம்

ஆவின் பால் விலையை குறைப்பது பற்றி 8 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஆவின் பால் விலை உயர்வை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மனு தொடர்பாக 8 வாரங்களுக்குள் அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆவின் பால் மீது பொது மக்களுக்கும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பிறந்த குழந்தை யில் இருந்து முதியோர் வரை ஆவின் பாலை பயன்படுத்து கின்றனர்.

ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் தினமும் 20 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்கிறது. சென்னையில் மட்டும் 11 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது.

கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் ஆவின் பால் விலை உயர்த்தப் பட்டதாக கூறுகிறார்கள். இதற் கிடையே, சென்னைக்கு எடுத்து வரப்படும் ஆவின் பால் திண்டிவனம் அருகே நடுவழியில் ஒரு கும்பலால் திருடப்பட்டு வெளியே விற்கப்படுவதாகவும், ஆவின் பாலில் தண்ணீர் கலந்து சென்னையில் விநியோகிப்ப தாகவும் புகார் எழுந்தது.

இதன்மூலம் தினமும் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுவதா கவும், ஆண்டுக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள பால் திருடப்பட்டிருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி திருடி விற்பனை செய்த பாலின் மொத்த மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நஷ்டத்தை ஈடுகட்டு வதற்காக பால் விலையை உயர்த்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட வர்களிடம் இருந்தும், உடந்தை யாக இருந்த அதிகாரிகளிடத்தில் இருந்தும் திருட்டு போன பணத்தைப் பெறாமல், ஆவின் பால் விலையை உயர்த்தி ஏழைகளின் சுமையை அதிகரித்துள்ளனர். அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலின் அளவை ஏழை நுகர்வோர்கள் குறைத்துள்ளனர். இது முற்றிலும் நியாயமற்றது.

இதுதொடர்பாக கால்நடைத் துறை செயலாளர் மற்றும் ஆவின் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி மனு கொடுத்தேன்.

அந்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். வாடிக்கை யாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்க தடை விதிப்பதுடன், 31-10-14 அன்றைய தினத்துக்கு முன்பு இருந்த நிலையை நீடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் இந்த வழக்கை விசாரித்து, “மனுதாரரின் மனுவை எட்டு வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT