தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இது சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அது காற்றழுத்த தாழ்வு நிலையாகவே நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமைக்கு பிறகு, உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் கண்டிப்பாக மழை பெய்யும். பகலில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.சனிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ, புழல், பொன்னேரி, செங்குன்றம், சென்னை நுங்கம்பாக்கம்,
அண்ணா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், மாமல்லபுரம், உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.