தமிழகம்

வெற்று சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது: பன்னீர்செல்வத்துக்கு கருணாநிதி பதில்

செய்திப்பிரிவு

முதல்வர் பன்னீர்செல்வத்தின் வெற்று சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது. தன் கடமையைச் சட்டப்படி முறையாக நிறைவேற்றும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பன்னீர்செல்வம், ஏதோ கல்லூரியின் முதல்வர்போல், பினாமி ஆட்சி என்றால் என்ன, மைனாரிட்டி ஆட்சி என்றால் என்ன, ஆலோசகர் என்றால் என்ன, துணை முதல்வர் என்றால் என்ன என்றெல்லாம் பாடம் சொல்லித் தர முயன்று அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், பேரவைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் திமுகவினர் நடந்துகொண்டால், அதற்குரிய பலனைத் தான் பெறுவர் என மிரட்டியிருக் கிறார். பன்னீர்செல்வத்தின் வெற்று சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது. தன் கடமையைச் சட்டப்படி முறையாக நிறைவேற்றும்.

தைரியம் இருந்தால் 4-ம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி பங்கேற்று பேசத் தயாரா என்றும் பன்னீர்செல்வம் சவால் விடுத்திருக்கிறார். 4-ம் தேதி சட்டப் பேரவையில் நான் பங்கேற்பதற்கு எந்தவித தடையும் இல்லை. அதற்கு தைரியமும் தேவையில்லை. அதிமுக அரசின் பிரச்சினைகள் இந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் அடுக்கடுக்காக மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அதிமுக ஆட்சியின் அவலங் களைப் பற்றி நாள் கணக்கில் பேசுவதற்கு ஏராளமான விஷயங் கள் தாராளமாகவே இருக்கின்றன. ஏன் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்? முதல்வர் பொறுப் பேற்பதற்கு முன்புவரை இருந்து வந்ததைப்போல், அமைதியாக இருப்பதுதான் பன்னீருக்கு அழகு. நாட்டுக்கும் நல்லது.

SCROLL FOR NEXT