தமிழகம்

அதிமுக அவதூறு: காஞ்சியில் திமுக மறியல்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து அதிமுகவின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், காஞ்சி நகரப் பகுதியில் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுகவினரின் இந்த செயலை கண்டித்தும் மற்றும் திமுக தலைவரை விமர்சித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதை தடுக்கக் கோரியும் திமுகவின் காஞ்சி நகர செயலாளர் சி.வி.எம்.சேகர் தலைமையில் திமுகவினர் மூங்கில் மண்டபம் அருகே உள்ள காந்தி சாலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், காந்தி சாலையில் சிறிது நேரம் மட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திமுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே, காந்தி சாலையின் மறுமுனையில் உள்ள தேரடி அருகே அதிமுகவினர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். மேலும், அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளருக்காக 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சின்னையா மற்றும் எம்பிக்கள் மரகதம், ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனால், காந்தி சாலையில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க காந்தி சாலை முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

எஸ்பியிடம் மனு

காஞ்சிபுரம் நகர் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து, அதிமுக மாணவர் அணி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, நகர திமுக சார்பில் எஸ்.பி-யிடம் மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT