தமிழகம்

கேரளம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் போராட்டம்: வைகோ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் கேரளம் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்.

தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்களின் செயல்களை வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை அடுத்துள்ள அமராவதி அணைக்கு வரும் பாம்பாற்றின் தண்ணீரைத் தடுக்கும் வகையில் கேரளத்துக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் அணை கட்ட கேரள அரசு கடந்த வாரம் அடிக்கல் நாட்டியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக திருப்பூர், கரூர் மாவட்ட மதிமுக விவசாயிகள் அணி சார்பில் கேரள அரசைக் கண்டித்து, அமராவதியில் இருந்து வாகனப் பிரச்சார விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:

கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாக இருக்கும் தமிழக மக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மதிமுக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

இதேபோன்று 2012-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ம் தேதி பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயன்றது. அப்போது போராட்டங்கள் தீவிரமாக நடந்ததால் அணை கட்டுவதை கேரள அரசு கைவிட்டது. தற்போது பட்டிசேரி என்ற இடத்தில் அணையை கட்டி பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் பெற்று வரும் தண்ணீர் உரிமையை பறிக்க நினைக்கின்றனர். 49 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 80 லட்சம் மக்கள் குடிநீர் பெறும் உரிமையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் முல்லை பெரி யாறில் கேடு செய்து அணையை உடைக்க முயற்சி நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி முறியடித்துள்ளோம்.

கடந்த 1959-ல் மேல் அமராவதி திட்டம் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ள தமிழகம் முயன்ற போது சுற்றுச்சூழல் அனுமதி மறுக் கப்பட்டது. தற்போது கேரள அரசுக்கும் இது பொருந்தும். வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதியை பெறாமல் அணையை கட்டுகிறது கேரளம்.

வஞ்சிக்கிறது கேரளம், பாலாற்றில் பாதகம் செய்கிறது ஆந்திரம். காவிரியில் அக்கிரமம் செய்கிறது கர்நாடகம். அண்டை மாநிலங்களால் தமிழகம் வஞ்சிக் கப்பட்டு வருவதை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லை பெரியாறு விவகா ரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டுகிறேன். மீண்டும் அதே வேகத்துடன் செயல்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்.

முதலில் அறவழியில் போராட் டம், அதற்கு நடவடிக்கை இல்லை என்றால், பிறகு கடுமையான போராட்டம் நடத்த திட்டமிட்டுள் ளோம் என்றார்.

பின்னர், அமராவதி அணை அருகே உள்ள கல்லாபுரம் கிராமத் தில் வாகனப் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். இப் பயணம் ருத்ராபாளையம், கொழுமம், கண்ணாடிபுத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, செலாம்பாளையம், தளவாய்ப் பட்டினம் வழியாக தாராபுரத்தை சென்றடைந்தது. அங்கிருந்து சின்னதாராபுரத்துக்குச் சென்றது. இந்த பிரச்சாரப் பயணத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மதிமுகவினர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT