தமிழகம்

72 வயது முதியவருக்கு முழங்கால் மாற்று நவீன அறுவைச் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனையில் நடந்தது

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 72 வயதான முதியவருக்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை துறையின் நிபுணர் டாக்டர் மதன் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:

மூட்டு வலியின் காரணமாக இந்தியாவில் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2003-ல் 9 ஆயிரம் பேர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து வந்தனர். ஆனால் 2013-ல் 70,000 பேர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சையை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. குறிப்பாக 40 வயதுக்கும் உட்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. போதிய நடை பயிற்சியின்மையே காரணமாக இருக்கிறது.

வழக்கமாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களில் நாலில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு புதிய முழங்கால் மூட்டு சரியாக பொருந்தாமல் அவதிப்படுவார்கள். ஆனால், தற்போது நாங்கள் ‘அட்டியூன்’ முழங்கால் சாதன அமைப்பு மற்றும் ஐ அசிஸ்ட் நேவிகேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு சித்தூரை சேர்ந்த 72 வயதான சுப்ரமணியனுக்கு முழுமையான முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளோம். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அறுவைசிகிச்சை பெற்ற 3 நாட்களில் வலியில்லாமல் நடக்க தொடங்கிவிட்டார்.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் அனைவரின் தேவைக்கு ஏற்றவாறு முழங்கால் மூட்டைப் பொருத்தி அறுவை சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை முடிந்த 3 நாட்களில் நடக்கலாம். அதிக ரத்த கசிவு இருக்காது. அதிகமாக வலியும் இருக்காது. அறுவை சிகிச்சை பெற்ற பிறகு 30 வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. வழக்கமான முழங்கால் மாற்று அறுவைசிகிச்சைக்கு ரூ.2.15 லட்சம் செலவாகும். ஆனால், இந்த தொழில்நுட்பத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, ரூ.35,000 கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT