திருச்சி: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்து இரண்டரை மாதங்களாகியும், பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை வெளியிடப்படாததால், 2.38 லட்சம் விவசாயிகள் தள்ளுபடிச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிதி நெருக்கடியான சூழலிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தள்ளுபடித் தொகைக்கு மேலாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் சலுகை பெற வாய்ப்பு ஏற்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்தும் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடன் தள்ளுபடியை முழுமையாகப் பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறும் பயிர்க்கடனுக்கு ஓராண்டு வரை வட்டி கிடையாது. ஓராண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டி செலுத்த வேண்டியதில்லை.
ஆனால், ஓராண்டைக் கடந்துவிட்டால் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள், ஓராண்டு முடிவடைவதற்குள் தள்ளுபடி போக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்கின்றனர்.
அப்போது, முதல்வர் அறிவித்த கடன் தள்ளுபடி தொடர்பாக இன்னும் அரசாணை வெளியாகவில்லை என்றும், எனவே, ரூ.75,000 தள்ளுபடி வழங்க முடியாது என்றும் வங்கி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்ய முடியும் என்றும், மீதமுள்ள கடன் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இதனால், அரசாணை வெளியாகும் எனக் காத்திருக்கும் விவசாயிகள் கடனை முழுமையாகச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்கிடையே, பயிர்க்கடன் பெற்று ஓராண்டு முடிவடைவதால், வட்டியும் செலுத்த வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
உரம் மற்றும் விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியானதும் அவற்றின் தாக்கம் உடனடியாக விவசாயிகளிடம் எதிரொலிக்கிறது.
ஆனால், சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடப்படாததை வங்கிகள் காரணமாகக் கூறுகின்றன.
எனவே, தமிழக அரசு தாமதமின்றி அரசாணையை வெளியிட்டு, அறிவித்தபடி பயிர்க்கடன் தள்ளுபடியை வழங்க வேண்டும். இதன் மூலம் 2.38 லட்சம் விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்றனர்.