திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படு கிறது. தங்க ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் அன்றிரவு வீதியுலா வருகின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் மகா தீபத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை விருச்சிக லக்கனத்தில் 6.05 மணி முதல் 7.25 மணிக்கு முன்பாக நடந்தது. இதற்காக கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’என்று பக்தர்கள் கோஷங்கள் முழங்க, கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தி.மலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நேற்று முதல் வருகிற 4-ம் தேதி வரை காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது. 7-ம் நாள், மகா ரதங்கள் தேரோட்டம் நடைபெறும். மகா தீபத் திருவிழாவுக்கு மறு நாள் (6-ம் தேதி) இரவு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் புறப்பட்டுச் செல்கிறார்.