தமிழகம்

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு: நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டம்

செய்திப்பிரிவு

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காளியம்மன் கோயில் சாலை சந்திப்பு வரையில் 4 வழி கொண்ட புதிய மேம்பாலத்தை ரூ.55.27 கோடியில் கட்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம் சந்திப்பு முக்கியமான இடமாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் உள்ளே சென்று வருகின்றன. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் இடமாக உள்ளது.

இதுதவிர வடபழனி வழியாக அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம் மற்றும் வடசென்னைக்கு செல்வோர் அதிகமாக உள்ளனர். இதனால், 24 மணிநேரமும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதேபோல், விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வரும் வழியிலும் வாகனங்களின் வருகை அதிகமாக இருக்கிறது. இதுதவிர அருகில் ஆம்னி பஸ் நிலையமும் இருப்பதால் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, கோயம்பேடு காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் சந்திப்புகளை இணைத்து சுமார் 1.2 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியானது. இந்நிலையில் ரூ.55.27 கோடி செலவில் மேம்பாலம் கட்ட டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 20-ம் தேதி மாலை 3 மணி வரை டெண்டர் படிவங்களை அளிக்கலாம்.

4 வழிப்பாதை மேம்பாலம்

இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கோயம்பேடு ஒன்றாக உள்ளது.

எனவே, இங்கு 1.2 கி.மீ. தூரத்துக்கு 4 வழிப்பாதைகள் கொண்ட ஒரு மேம்பாலத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் மதிப்பு ரூ.55.27 கோடியாகும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட 33 மாதங்களில் இந்த பாலத்துக்கான முழு பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT