தமிழகம்

புதிய கட்சியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம்: முன்னாள் அமைச்சர் ஜி.கே வாசன் பேச்சு

செய்திப்பிரிவு

புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், கட்சியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சென்னையில் நேற்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிய கட்சியை ஆரம் பித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்த இளைஞரணியினர் ஏராளமானோர் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி பதவிகள், சட்ட மன்றம் மற்றும் மக்களைவை தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட் டுள்ளன. இதன்படி 124 சட்டமன்ற தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும், 24 மக்களைவை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும் வாசனுக்கு ஆதரவாகவுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழகத்தில் புதிய வரலாற்றை படைப்பதற்காக புதிய முடிவை எடுத்துள்ளோம். இந்த புதிய பாதை, லட்சியத்தை அடையக்கூடிய நல்ல பாதையாக இருக்க வேண் டும். இதற்காக தொடர்ந்து 4 நாட்களாக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை களை நடத்தி வருகிறோம். மக்கள் பிரச்சினையை எடுத்து அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களது நம்பிக்கையை மட்டுமன்றி அன்பையும் பெற வேண்டும்.

தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மத்தியில், தமிழகத்தில் நேர்மையான நிர்வாகத்தை யார் தருவார்கள், நியாயமான திட்டங்களை முறையே பெற்றுத்தருவது யார் என நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே சாதாரண மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தொண்டர்கள் என்னையே சுற்றி சுற்றி வர வேண்டாம். திருவள்ளூர் முதல் கன்னியாகுமாரி வரை நானே தொண்டர்களை தேடி சுற்றி சுற்றி வருவேன்.

நாம் பெருந்தலைவர் காமராஜரி டம் அரசியல் பயின்றவர்கள் இல்லை. ஆனால் அவரிடம் பாடம் படித்த மூத்த தலைவர்கள் இன்று நம்மோடு இருக்கிறார்கள். காங்கிரஸில் இருக்கும் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மூத்தவர்களின் மாவட்ட காங்கிரஸ் என்கிற பிரிவினை ஒரு போதும் நம்மிடம் இருக்கக்கூடாது. ஒருவொருக்கொருவர், அன்போடும், பண்போடும் பழகி கொள்ள வேண்டும். இதனை மீறினால், என்னோடு பணி செய்வதற்கு அழகல்ல. இளைஞர் களும், மாணவர்களும் பேச்சிலும் செயலிலும் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும்.

புதிய இயக்கத்தில் இளைஞர்க ளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியுள்ளனர். உண்மைக்கு ஏற்ப நியாயத்தின் அடிப்படையில் எனது முடிவு கள் அமையும். இன்னும் 5 ஆண்டுகளில் என்னுடன் இருக்கும் இளைஞர்கள் பலர் எம்பி. யாகவும், எம்எல்ஏ.வாகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும் ஆகியிருப்பார்கள். நான் கட்சியின் தலைவர் என்பதை தாண்டி குடும்பத்தில் ஒருவனாகவே நடந்து கொள்வேன்.

இயக்கத்தின் பெயரை அறிவிக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கோட்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான பணிகளில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி பொதுக்கூட்டம், தமிழகமே குலுங்கும் அளவில் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், விடியல் சேகர், கோவை தங்கம், ராமன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா, முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT