தமிழகம்

தனியார் பால் விலை உயர்வால் டீ, காபி விலை அதிகரிப்பு: சென்னையில் டீ ரூ.8, காபி ரூ.9

செய்திப்பிரிவு

தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதால் சென்னையில் உள்ள தேநீர் கடைகளில் முன்கூட்டியே டீ, காபி மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு சென்னையில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டீ ரூ.8 ஆகவும், காபி ரூ. 9, பால் ரூ. 9 ஆகிய விலைகளில் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் ஒரு டீ ரூ. 7-க்கும், காபியின் விலை ரூ. 8 ஆகவும், பால் ரூ.8 ஆகவும் இருந்தது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளன. நேற்று ஆரோக்கியா நிறுவனத்தின் பால் ஒரு லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேநீர் கடைகளில் டீ, காபி விலைகளும் உயர்ந்துள்ளன.

பொதுவாக தேநீர் கடைக ளுக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 லிட்டர் பால் தேவைப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையம், சில்லறை விற்பனை கடைகள் நிறைந்த பகுதி போன்ற இடங்களில் உள்ள டீ கடைகளுக்கு தினமும் 60 முதல் 70 லிட்டர் பால் வரை தேவைப்படுகிறது. பெரும்பாலான தேநீர் கடைகளில் தனியார் பால் பாக்கெட்தான் பயன் படுத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் தனியார் நிறுவன பால்கள் 10 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவன பால் நாளொன்றுக்கு 11. 5 லட்சம் லிட்டர் விநியோகம் ஆகிறது. இதில் 7 லட்சம் லிட்டர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கும், மீதமுள்ளவை சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப் படுகின்றன.

சென்னை நகரில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வெறும் 3 ஆயிரம் கடைகள் மட்டும் சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தேநீர் கடைகள் வாடகை கட்டிடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தின் துணை செயலாளர் டி.டி. சுகுமார் கூறுகையில்,

‘‘தேநீர் கடைகள் பெரும் பாலானவை வாடகை கட்டிடங் களில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலை உயர்த்து வதால் டீ, காபி விலைகளும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறோம்'' என்றார்.

SCROLL FOR NEXT