தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் மனுக்களை மடித்து தாக்கல் செய்யும் பழங்கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி: ‘பிளாட் பைலிங் சிஸ்டம்’ அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை செங்குத்தாக மடித்து தாக்கல் செய்யும் பழங்கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனுக்களை மடிக்காமல் அப்படியே சமதளமாக (பிளாட்) தாக்கல் செய்யும்முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நீதிமன்றங்களில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள், 216க்கு 279 எம்எம் அளவுள்ள தாள்களில் வழக்கு விவரம் அச்சிடப்பட்டு தாக்கல் செய்யப்படுகின்றன. மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மொத்தத் தாளையும் செங்குத்தாக இரண்டாக மடித்து தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட ஆரம்பித்த நாளிலிருந்தே 150 ஆண்டுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் இந்த முறை தான் அமலில் உள்ளது.

ஒரு வழக்கு முடிய நீண்டநாள்கள் ஆகும்போது அந்த மனுக்களை மடித்து வைத்திருந்தபடியே பாதுகாக்க வேண்டியது உள்ளது. அவ்வாறு ஒரு மனு மாதக்கணக்கில் மடிந்தபடியே இருக்கும்போது மனு சிதிலமடைந்து அதிலுள்ள எழுத்துகள் அழியும் நிலை ஏற்படுகிறது. மேலும், அந்த மனு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் அதனை பிரித்து பார்த்து அதிலுள்ள விஷயங்களை படித்து தெரிந்து கொள்வதிலும் சிரமம் உள்ளது.

இந்த சிரமங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம், டெல்லி, மும்பை உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மனுக்களை மடிக்காமல் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழக நீதிமன்றங்களிலும் மனுக்களை மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் தரப்பில் 2013-ல் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையேற்று முதல்கட்டமாக ரிட் மேல்முறையீடு மனுக்களை மட்டும் மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வசதி அனைத்து வகை மனுக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன் விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்து வகை மனுக்களும் மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்வதற்கு நவ. 3 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை பிளாட் பைலிங் சிஸ்டம் முறையில் மடிக்காமல் தாக்கல் செய்யலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் எழுத்தர் பொதுநல நிதியத்தின் உறுப்பினர் எஸ்.பாண்டி கூறும்போது, இரண்டாவது அப்பீல் மனுவாக இருந்தால் 300 முதல் 400 பக்கங்கள் வரை இருக்கும். அவற்றை மடித்து தாக்கல் செய்வது சிரமமான ஒன்று. அந்த மனுவை மடித்தவாறு ஆவணக் காப்பகத்தில் அடுக்கிவைப்பதிலும் சிரமம் உள்ளது. மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அந்த மனுக்கள் அப்படியே வைத்திருந்து பிரிக்கும்போது கிழிந்துபோகின்றன. எனவே, மனுக்களை மடிக்காமல் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. மனுக்களை மடிக்காமல் ஸ்பைரல் பைண்டிங் முறையில் தாக்கல் செய்யும்முறை உச்ச நீதிமன்றம், பல உயர் நீதிமன்றங்களில் அமலில் உள்ளது. தற்போது இங்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT