தமிழகம்

பிளஸ்-2 தனித் தேர்வர்கள் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வருகிற 10-ம் தேதி (திங்கள்) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2015-ம் ஆண்டு நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித் தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை மூலம் கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் (எச் வகையினர்). அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும் 1.3.2015 அன்று பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்களும் நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் (எச்பி வகையினர்) முதல்முறையாக பிளஸ்-2 தேர்வெழுதும் நேரடித் தனித்தேர்வர்கள் (எச்பி வகையினர்) பகுதி-1 மற்றும் பகுதி-2 மொழிப் பாடங்களுடன் குறிப்பிட்ட பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். ஒருமுறை தேர்வுசெய்த பாடத் தொகுப்பை எக்காரணத்துக்காகவும் பின்னர் மாற்ற இயலாது.

ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சேவை மையங்களில் நவம்பர் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 21-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஞாயிறு விடுமுறை நாள் ஆகும். எச் வகை தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் கட்டணமும், இதர கட்டணமாக ரூ.35-ம், ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். இதேபோல், எச்பி வகை தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம், கேட்டல், பேசுதல், திறன் தேர்வுக்கு ரூ.2-ம் (மொத்தம் ரூ.187), ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு தனித் தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பயன்படுத்தித்தான் ஹால் டிக்கெட்டை பின்னர் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் அந்த எண்ணை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT