கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று மதுரை ஆட்சியர் மற்றும் கனிமவளத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2011-ம் ஆண்டு, அப்போதைய மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் ஐஏஎஸ், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பிறகு, கிரானைட் முறைகேடு தொடர்பாக சுமார் 75 வழக்குகளுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநல மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சகாயம் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, கடந்த மாதம் 28-ம் தேதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு செலவாக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் செலுத்தவும் உத்தரவிட்டது.
மேலும், ‘நான்கு நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும். விசாரணை முடியும்வரை சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். விசாரணைக்கு தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும். தற்போதுள்ள அறிவியல் மைய பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கிரானைட் விசாரணையில் தமிழக அரசுக்கு எந்த அச்சமும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், கடந்த 31-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து, மதுரை ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை தலைமை அலுவலகத்துக்கு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் சகாயத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை ஆட்சியர் சுப்பிர மணியனிடம் கேட்டபோது, ‘‘அரசின் உத்தரவு கிடைத்துள்ளது. அரசின் வழிகாட் டுதல்படி, தேவையான உதவிகளை வழங்குவோம்’’ என்றார். தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணை யர் அதுல் ஆனந்த் கூறும்போது, ‘‘இதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. விசாரணை தொடங்கினால் தெரியப்படுத்து கிறோம்’’ என்றார். சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான உத்தரவு எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தெரிவித்தார்.
சகாயம் எப்போது விசாரணையை தொடங்குவார் என்பது குறித்து அரசுத் தரப்பில் விசாரித்தபோது, ‘அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியி லிருந்து விடுவிக்கப்பட்டபிறகு, அவர் மதுரைக்கு சென்று விசாரணையை தொடங்குவார்’ என்று தெரிவிக்கப்பட்டது.