தமிழகம்

ராமானுஜம் டிஜிபியாக இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் திமுக மனு

செய்திப்பிரிவு

தமிழக டி.ஜி.பி. பொறுப்பில் ராமானுஜம் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாகவும் நேர்மை யாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழக டி.ஜி.பி. பொறுப்பில் உள்ள ராமானுஜத்தை வேறு மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம்.

இந்த சூழலில் தேர்தல் தொடர் பான பணிகளில் ஈடுபடுவதில் இருந்து ராமானுஜத்தை விடுவித் துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதற் காக காவல் துறை அதிகாரி அனூப் ஜெய்ஸ்வாலை டி.ஜி.பி.யாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனினும் காவல் துறை நிர்வாகங் களைக் கவனிக்கும் தலைமைப் பொறுப்பில் டி.ஜி.பி.யாக ராமானுஜம் தொடர்ந்து நீடிக்கிறார்.

தமிழகத்தில் 2 டி.ஜி.பி.க்கள் பணியாற்றுவது தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு இடையூறாகவும், குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமையக் கூடும்.

எனவே, தமிழகக் காவல் துறை டி.ஜி.பி. பொறுப்பில் ராமானுஜம் நீடிக்காத வகையில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT