மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரின் மகள் இந்திரா உட்பட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது. இவர், கடந்த 2.9.2014 அன்று கொடைக்கானலுக்குக் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா மற்றும் கணேசன், பூங்கொடி, சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே ஜமால்முகமது கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திரா உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் இந்திரா, கணேசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் சென்னையில் தங்கி 15 நாள் சிபிஐ டிஎஸ்பி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடுத்த 15 நாள் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார். மற்ற 4 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.