தமிழகம்

நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்பதை உச்சநீதிமன்றம் நியமித்த அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு, அணையின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையையும் நிராகரித்தது.

இந்த சூழலில், முல்லை பெரியாறு அணையிலிருந்து வைகை ஆற்றுக்கு தமிழக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று, கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இப்படி செய்தால், வைகை ஆற்றின் கரையில் உள்ள 25 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும். எனவே, கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி தமிழகத்துக்கு, தேவையான தண்ணீரை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT