விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக் கோட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (38). அப்பகுதியில் இவருக்குச் சொந்தமாக நாக்பூரி லுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 60 அறைகள் கொண்ட இந்த ஆலையில் பேன்ஸி ரக பட்டாசு கள் மட்டுமே தயார் செய்யப் படுகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி உற்பத்தி முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற் பத்தியை மேற்கொள்ள இந்த பட்டாசுத் தொழிற்சாலை நேற்று முன்தினம் பூஜைகள் நடத்தி மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று காலை உற்பத்தி தொடங்கப்பட்டது. 50 தொழிலாளர்கள் இந்த ஆலை யில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், ஆலையிலுள்ள ஒரு அறையில் மணி மருந்து தயாரித்து அதை சல்லடையில் சலிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர் பாராதவிதமாக மணி மருந்து வெடித்துச் சிதறியது. உடனே அந்த அறையும் இடிந்து முற்றிலும் சேதமடைந்தது. அறையில் மணி மருந்து சலித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை காலனியைச் சேர்ந்த குருசாமி மகன் பெருமாள் (37), மதுரை மாவட்டம் கோப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் வேல் முருகன் (37) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.
மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த நாராயணசாமி மகன் முத்து ராமன் (34) என்பவருக்கு இடது கால் துண்டானது. உடல் முழுவதும் பலத்த தீக்காய மடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முத்துராமன், மீட்கப் பட்டு சிவகாசி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.
இதுபற்றி தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உடல் சிதறி இறந்து கிடந்த பெருமாள் மற்றும் வேல் முருகனின் சடலங்களை மீட்டனர். இந்த விபத்தையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் சீனிவாசன் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த வர்களை சிவகாசி அரசு மருத்துவ மனையில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.