புதுச்சேரியில் தொகுதி தோறும் குளமொன்றைத் தூர் வார ரஜினி மக்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக மூலகுளத்தில் குளத்தைத் தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மேலும் புதுச்சேரியில் தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றாலும் எதிர்வரும் காலத்தில் தமிழகத்தைப் போல் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகமும் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்களும் ஏரி, குளங்களை தூர்வார முன்வர கோரியுள்ளதால் பலரும் தங்கள் பகுதிகளில் குளங்களை தூர்வாரத் தொடங்கியுள்ளனர்.
மழைக்காலத்துக்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி மழை நீரைச் சேமிக்க புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலகுளம் பகுதியில் உள்ள குளத்தை 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தூர்வாரி, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்தினர்.
இப்பணி தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலர் பிரபாகர், இணைச் செயலர் காமராஜ் ஆகியோர் கூறுகையில், "புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளிலும் தொகுதி செயலர் தலைமையில் குளமொன்றைத் தூர் வார முடிவெடுத்துள்ளோம். அதன்படி புதுச்சேரியில் முதல் கட்டமாக மூலகுளத்தைத் தூர்வாரத் தொடங்கியுள்ளோம்.
மழைக்காலம் வரவுள்ளதையொட்டி புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் குளங்களை தூர் வாரி விடுவோம். அதற்கான பணிகள் தொகுதி வாரியாக நடந்து வருகிறது" என்று குறிப்பிட்டனர்.