தமிழகம்

பக்தர்கள் வசதிக்காக வைக்கப்பட்ட குடிநீரை திருடும் உணவக ஊழியர்கள்

செய்திப்பிரிவு

அத்திவரதர் எழுந்தருளும் வைபவத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீரை அருகில் உள்ள உணவகங்களின் ஊழியர்கள் பலர் தள்ளுவண்டியில் பேரல்கள் மூலம் பிடித்துச் சென்றனர்.

இதனால் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் நிலை உருவானது. பக்தர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீரை உணவகங்களில் பணி செய்பவர்கள் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

அதேபோல அத்திவரதரை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு உணவகங்களில் சாப்பிடுகின்றனர். கூட்டம் அதிகம் இருப்பதால் சில இடங்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், சில இடங்களில் தரமற்ற வகையில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. எனவே உணவு பாதுகாப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மயங்கி விழுந்த மூதாட்டி

வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்வதற்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் மேற்கு கோபுரம் அருகே மயங்கி விழுந்தார். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT