தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என, மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:
"பொய்த்த பருவமழை, நிலத்தடி நீர் குறைவு, காவிரியில் தன்ணீர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் காவிரி டெல்டா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் தொழில் விவசாயம் தான். ஏற்கெனவே விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். உற்பத்தி குறைவு, உணவு பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் கிணறுகளை கொண்டு வருகிறது. ஹைட்ரோகார்பனை எடுக்க மிக ஆழமாக கிணறுகளை அமைக்கப்படுகின்றன. முன்பு 100-300 மீட்டரில் நிலத்தடி நீர் பெற முடிந்தது. ஆனால், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் 1000-2000 மீட்டரில் தான் தண்ணீர் பெற முடிகிறது. இதனால், போர்வெல் மூலம் விவசாயிகளால் தண்ணீர் பெற முடிவதில்லை.
அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்து விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி மட்டுமல்லாமல் சில தனியார் நிறுவனங்களும் அனுமதி கேட்டிருக்கிறது. இத்திட்டத்தை நிறுத்த விழுப்புரம் முதல் கடலூர் வரை 400 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பணக்கார நாடாக இந்தியா இருக்க நாம் விரும்பவில்லை, மாறாக, ஆரோக்கியமான நாடாக இருக்க வேண்டும். இத்திட்டத்தால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கின்றது. நாங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் என தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடாது.
எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டுமென்றால், இதுபோன்ற திட்டங்களை மனிதர்கள் இல்லாத இடத்தில் செயல்படுத்த வேண்டும். இங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள். எதிர்கால தலைமுறை குறித்து கவலை ஏற்படுகிறது. இதனால், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இனி மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். இத்திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்"
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.