நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன்(அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.
அதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன்படி வரும் 18-ம் தேதி புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.
இதையடுத்து, திமுக போட்டியிடும் மூன்று இடங்களில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோரும், மீதமுள்ள ஒரு இடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (சனிக்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அதிமுக போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான அ.முஹம்மத் ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்படுகின்றனர்.
சமீபத்தில், நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது, ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது", என தெரிவிக்கப்பட்டுள்ளது.