மாநிலங்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது பாமக. அப்போது அதிமுகவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு தேனி தொகுதியில் மட்டுமே வென்றது. பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தோல்வையைத் தழுவின. அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில் குமாரிடம் தோற்றுப்போனார்.
இந்நிலையில் ஒப்பந்தப்படி மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடத்தை அதிமுக தலைமை ஒதுக்கியது. அதில் யாரை நிறுத்துவது என பாமக கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாமக வெளியிட்ட அறிவிப்பு:
“நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் செய்து கொள்ளப்பட்ட தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக கட்சியின் இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு பாமக தெரிவித்துள்ளது.